வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Saturday, September 26, 2015

நெடுஞ்சாலை




நெடுஞ்சாலை - நீண்ட நாட்களாக படிக்க வேண்டிய லிஸ்டில் இருந்த புத்தகம். இப்போதுதான் சிங்கப்பூர்-பீஜிங்-ஷன்காய்-சிங்கப்பூர் விமானம் மற்றும் புல்லட் ரயில் யயணத்தில் படித்து முடித்தேன். நெடுஞ்சாலையை விமானத்திலும், புல்லட் ரயிலும் படிக்க நேர்ந்தது எதிர்பாரமல் நடந்த முரன்.

பெரியார் போக்குவரத்து கழகத்தில் (தற்போதைய அரசு போக்குவரத்து கழகம்) பணிபுரியும் தமிழரசன் (கண்டக்டர்), ஏழைமுத்து (டிரைவர்) மற்றும் அய்யணார் (மெக்கானிக்) என்ற மூன்று தற்காலிக பணியாளர்களை ( Casual Labour) பற்றிய கதையை தென்னார்காடு ஜில்லா வட்டார மொழியில் சொல்லியிருக்கிறார் கண்மணி குணசேகரன். இவர் விருத்தாசலம் போக்குவரத்து கழக பனிமனையில் பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்து கழக பனிமனை, அதில் பணியாற்றும் பணியாளர்கள், கண்டக்டர், டிரைவர், பேருந்துகளை பராமரிக்கும் முறை என்று அந்த தொழிலாளர்களையும், பேருந்துகளையும் நம் கண் முன்பே காணொளி காட்சிகளாக நடமாட விட்டிருக்கிறார் குணசேகரன். வட்டார மொழியில் மூன்று பேர்களின் கதையை சொல்லும்போது அங்கங்கே இயல்பாக நகைச்சுவையோடு கதையை சொல்லி புன்முறுவல் செய்யவும் வைக்கிறார்.

நாவலை படித்து முடித்த பிறகு நேஷனல் ஸ்கூலில் படிக்கும்போது தினமும் பள்ளிக்கு 11-ம் நம்பர் சி.ஆர்.சி (C.R.C- Cholan Roadways Corporation) டவுன் பஸ்ஸில் சென்ற அனுபவங்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தபோது சென்னை-மன்னார்குடி திருவள்ளுவர் போக்குவர்த்து பயணங்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
நேஷனல் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்போது பள்ளியில் இடப்பற்றாக்குறையால் ஷிப்ட் முறை. எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை. பதினொன்னரை மூன்றாவது ட்ரிப் 11-ல்தான் ஸ்கூல் போக வேண்டும். ஆனால் பல சமயங்களில் கூட்டம் அதிகம் இல்லாத டிரிப் என்ற காரணத்தால் பஸ்சை ரிப்பேர் பார்க்க வேண்டிய காலகட்டத்தில் மூன்றாவது ட்ரிப்பை கட் செய்து விட்டு பிரேக்டவுன் என்று சொல்லிவிட்டு பனிமனைக்கு கொண்டு சென்று விடுவார்கள். எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்கூலுக்கு நாக்கு தள்ள காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் டிரிப்ப கட் பண்ண கண்டக்டரையும், டிரைவரையும் மனதில் திட்டிக்கொண்டே, கல்ல விட்டேஞ்சி அவங்க மூஞ்சிய பேக்கனும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வேன். இந்த நாவலை படித்த பிறகு கண்டம்டு பேருந்துகளை பராமரிப்பதில், ஓட்டுவதில் உள்ள சிக்கல்கள் அவர்களின் பிரச்சனகள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதால்அன்று அவர்களை திட்டியதற்காக இன்று மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

சி.ஆர்.சி யில் வேலை பார்த்த அண்ணன் கண்டக்டர் சந்திரசேகரன், கண்டக்டர் ஆசைத்தம்பி, டிரைவர் மணிவாசகம் இன்னும் பெயர் ஞாபகம் இல்லாத டிரைவர், கண்டக்டர் முகங்கள் மீண்டும் மீண்டும் கண் முன்பே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

யாரும் சொல்லாத கதைக்களத்தில் தன்னுடைய சொந்த அனுபங்களை கொண்டு கண்மணி குணசேகரன் எழுதியிருக்கும் இந்த நாவல் மிக முக்கியமான நாவல் !!!

No comments: